SDJF. Powered by Blogger.

Thursday, October 27, 2011

ஆண் நினைத்தால் ரோட்டிலும் தலாக் செய்யலாம்?


நீங்கள் இருவருக்கிடையில் சமாதானம் செய்து வையுங்கள் என அல்குர்ஆன் மனித சமூகத்திடம் வேண்டி நிற்கின்றது. குடும்ப விவகாரங்கள் மிக நேர்த்தியான முறையில் சமரசம் செய்யப்படுவதை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது. உறவுகளை எளிதில் பிரித்து, சொந்தங்களைத் துண்டாடுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
பிட்டு, இடியாப்பம் மற்றும் வடை ஆகியவற்றைச் சுட்டு விற்று அன்றாடம் வாழ்க்கை நடத்தும் ஒர் பெண் திருகோணமலையில் வசித்து வருகின்றார்.

மரம் வெட்டும் தொழிலாளியான அப்பெண்ணின் கணவர் கன காலம் வரவும் இல்லை, கணவர் வேலைக்குப்போன இடத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார். ஆனால் இந்தப் பெண்ணோ வயதுக்கு வந்த பெண்பிள்ளை படிக்கும் பையன் ஒருவனையும் வைத்துக் கொண்டு வருமானமும் போதாத நிலையில் கணவர் எந்தவித பராமரிப்புச் செலவும் வழங்காத நிலையில்  அப்பமும் இடியாப்பமும் விற்று காலத்தை ஓட்டி வருவதுடன் தன் கணவர் தனக்கு செலுத்த வேண்டிய பராமரிப்புச் செலவைக் கோரியே காதியாரிடம் சென்றுள்ளார்...


காதியார் முறைப்பாட்டைக் கேட்டுவிட்டு அடுத்த விசாரனைக்கான திகதியைக் கொடுத்துள்ளார். இப்படியே சம்பவம் இழுபறியாக இருந்து கணவன் இதனை தலாக் வரை நகர்த்திவிட்டார். கணவனுக்கு வேறு பெண்ணோடு தொடரபு என்பதைத் தவிர, தலாக் இடம்பெறுவதற்கான எந்த நேர்த்தியான காரணங்களும் இங்கு இல்லை. அதேநேரம், இந்த ஆணுக்கு இன்னும் இரண்டு இடங்களில் மனைவிமார் இருப்பதாகவும் கூறப்பட்டது. கதீஜா உம்மா இதுபற்றி காதியாரிடம் பேச ஆண் நினைத்தால் ரோட்டிலும் தலாக் சொல்லுவான். அதனை யாரும் கேட்க முடியாது என்று சொல்லியுள்ளார். பின்னர, பொலிஸ் முறைப்பாடு செய்ய காதியாரிடம் கடிதம் கோரிய போது ‘எனக்கு 400 கோட்டும் 40 காதிமாரும் சப்போட்டுக்கு இருக்கின்றார்கள் நான் தர மாட்டேன்” என திமிராக மறுத்துள்ளார்.

அப்படியே கடிதம் தேவையென்றால் அது மட்டுமல்ல என்ட வீட்ட வந்து, அஞ்சு வேளை தொழுது போட்டு நீ தவமிருக்க வேண்டும் என்றாராம் காதியார். மனம் வருந்திய கதீஜா உம்மா உங்கள் கோட்டுக்கு வருபவர்;களுக்கு இதுதானா தீர்ப்பு எனக் கேட்க ‘போடி பொட்டச்சி வெளிய' என்றாராம் காதியார். இதுபோன்ற பெண்களின் மனோநிலையைப் புரிந்துகொள்ள முடியாத இரும்பு மனிதர்களை காதியார்;களாக நியமிப்பது ஒரு சமூகத் துரோகம்தான்.

நபி (ஸல்) தன் இறுதி ஹஜ்ஜின் போது ஒற்றுமையை வலியுறுத்தி உபதேசம் செய்ததுடன் ஒவ்வொரு முஸ்லிமின் கண்ணியமும் செல்வமும் இரத்தமும் இன்னொரு முஸ்லிம் மீது ஹராமாக்கப்பட்டள்ளது என்றார். இவ்வாறான காதியாரின் செயல்களை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? சிலர் “ஓன்ட ஒன்ட இந்த வாய்க்கட்டுக்குத்தான் புரிசன் ஒன்ன விட்றிப்பான்”, “புள்ளய பெக்கத் தெரியும் வளக்கத்தெரியாது”, "பொம்புள இஞ்ச பேசக்கூடாது” என்றெல்லாம் பேசுவதுண்டு. அதற்கான சான்றுகளும் உண்டு. "ஒரு காதியார் நீங்கள் என்ன ஐப்ரோ சேவ் பண்ணுகின்றீர்களா” என்று கேட்டாராம். அதற்கான பதிவும் எம்மிடம் உண்டு. இது காதியார் பெண்கள் தொடர்பாக கொண்டுள்ள தப்பாக அபிப்பிராயங்களை களையாமலே விசாரனையை ஆரம்பிப்பதை எடுத்துக்காட்டுகின்றது.

அது மட்டுமன்றி வழக்குக்கு வரும் பெண்களைப்பார்த்து  “என்னடி விஷயம்?” ஏன் வந்தாய்? என்று எந்தவித மரியாதையுமின்றி பெண் என்ற இளக்காரத்துடன் பேசும் தன்மையும் காணப்படுகிறது. வெளிநாடு சென்று வந்த பெண்கள் வழக்குக்கு வந்தால் ஓ நீங்க வெளிநாடு போய் அப்பிள் பழம் திண்டுட்டு வந்து இங்க வந்து புருசன்மாரை மதிக்கிறதில்லை என கண்டபடி பெண்களை ஏசிப் பேசி அவமானப்படுத்துகிறார் .
இன்னொரு சம்வத்தில் காதியார் தூசனம் பேசுதை சகிக்காமல் அவருக்கு நல்ல வார்த்தை பேசுங்கள் என்று ஒரு இளைஞன் கூற காதியார் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டள்ளார். அத்தோடு, உரிய வாலிபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளார். மூன்று மாதங்கள் மறைந்திருந்த அந்த வாலிபர துரதிஷ்டவசமாக மாட்டிக்கொண்டு சிறைக்கும் சென்று வந்துள்ளார்.

இவ்வாறு தகாத வார்த்தைகள் பேசுவதும் முறையற்ற சங்கடத்திற்குற்படுத்தும் கேள்விகள் கேட்பதும் நிறுத்தப்பட வேண்டும். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பெண்கள் தரப்பு நியாயங்கள் முழுமையாக கேட்கப்பட வேண்டும். பகிரங்கமாக பேச முடியாத சந்தர்ப்பங்களில் மறைவாக பெண்களால் விசாரிக்கப்படுவதற்கு வாய்ப்பேற்படுத்த வேண்டும்.
கதிஜா உம்மாவின் இந்த வழக்கில் எந்தவித சமரச முயற்சியிலும் ஈடுபடுத்தாது நேரடியாகவே தலாக்கிற்குச் சென்றுள்ளார் காதியார். அத்தோடு, மூன்றாவது தலாக் சொல்லும் போது இப்பெண் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார். அதனைப் பொருட்படுத்தாத காதியார் தலாக்கை முடித்து செய்தியை கதீஜா உம்மாவுக்கு அறிவித்திருக்கிறார். இப்படி அவசர அவசரமாக ஏன் தீர்;மானம் எடுக்கின்றார் என்பது சொல்லாமலே நமக்குப் புரியும்.
இங்கு இடம் பெற்ற இன்னொரு அநியாயம் என்னவென்றால் இந்த பெண் மாதம் இரு முறை வழக்குக்கு ஒன்றரை வருடமாய் அலைந்து திரிந்தும் எந்தப் பயனும் கிட்டவில்லை. மாறாக தலாக் மட்டும் ஒழுங்காக காலம் தவறாது கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து குடும்பத்தைப் பிரிப்பதில் காதியாரின் உதவி ஆண்களுக்கு எவ்வளவு பலமாக இருக்கிறதென்பதை புரிந்து கொள்ள முடியும்.

சமத்துவத்தை ஆதரிக்கும் உங்களிடம் சில கேள்விகள் 
1. காதிமார் ஏன் பெண்களை இவ்வாறு அமங்களமாக நடத்துகின்றார்கள்?
2. இது போன்ற வேறும் சம்பவங்கள் உங்களுக்குத் தெரியுமா? 
3. இத்தகைய தவறு நடைபெறக் காணரம் என்ன? சட்டத்தைக் கொண்டு எவ்வாறு இத்தகைய கருத்துக்களை தீர்க்கலாம்? 

4 comments:

  1. இது பற்றிய பல சம்பவங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் .பெண்கள் என்றால் காதி மாருக்கு கேவலமாக போய் விட்டது போலும் .முஸ்லிம் பெண்கள் உலகில் எவ்வளவோ முன்னேறி இருந்த போதிலும் இலங்கையில் அவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது .மன வாழ்வு கசந்து போய் இனி வாழ முடியாது என்று கருதுகிற பட்சத்திலே காதி நீதி மன்றம் நோக்கி செல்கிறாள் .இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் இலங்கையில் காதி என்பவர் யார் ?அவருக்குரிய அலுவலகம் எது ?காதிக்குரிய தகைமைகள் என்ன ?காதி எவ்வாறான கேள்விகளை கேட்க வேண்டும் ?என்ற விடயம் எல்லாம் எழுதப்படாத சட்டமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்
    ஒருவருக்கு ஓய்வூதியம் கொடுப்பதன் நோக்கம் அவர் ஓய்வாக இருக்க வேண்டும் என்பது தான்.ஆனால் இங்கு ஓய்வு பெற்றவரே சில சமயங்களில் காதி நீதவானாக இருக்கின்றார் .இல்லாவிடில் ஊரில் பெரியவரோ மார்க்க பெரியார் ஒருவரோ நியமிக்கப்பட்டுள்ளார் .இரண்டு உள்ளங்களுக்கிடையில் தீர்ப்பை வழங்குபவருக்கு இருக்க வேண்டிய தகைமை என்ன என்பது பற்றி எங்கும் குறிப்பிடவில்லை .

    ReplyDelete
  2. காதியார்களின் குளறுபடியால் நல்லா இருந்த எத்தனையோ குடும்பம் பிரிந்த பல கதைகள் உண்டு, காதியாராக நியமிக்கப் படுகின்ற ஒருவருக்கான தகமைகளை இதுவரை வரையறுக்கப்படவில்லை என்பது மிகப் பெரிய பலவீனமாகும், குறிப்பாக சமூகத்தில் நற்பெயர் உள்ள உலமாக்களை காதியார்களாக நியமிப்பது உகந்ததது? எனக்குள் இப்போது அடிக்கடி எழுகின்ற ஒரு கேள்வி இன்று இலங்கை ஈரான், ஈராக், தினுசியா, நைஜீரியா போன்ற நாடுகளிலும்
    இஸ்லாமிய பெண்கள் உயர் நீதி மன்ற நீதிபையாக இருக்கின்றார்கள் ஏன் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பிரதமர்களாகவும், ஆட்சியில் முக்கிய பிரமுகர்களாகவும் இருந்திருக்கின்றார்கள், இப்போது சவூதி அரேபியா, கட்டார், குவைத் போன்ற நாடுகளில் பெண்கள் சட்டத்துறையை பயின்று வருகின்றார்கள் அப்படிஎன்றால் பெண் காதிகளை நியமிப்பதில் உள்ள சட்டச்சிக்கல், அல்லது ஷரீயா சிக்கல் என்ன? நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு தலைமைத்துவம் வழங்கப்படுவதை விரும்பவில்லை என்ற ஹதீஸ் எந்த அளவுக்கு நம்மத்தக்கது? அப்படிஎன்றால் இஸ்லாமிய ஷரீயா சட்டம் பேணப்படுகின்ற இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் நீதிபதியாகி தீர்ப்பளிப்பது எந்தவகையில் ஹதீசுக்கு முரணான செயற்பாடா? என்னைப்பொருத்தமட்டில் இஸ்லாம் அறிவு பூர்வமான மார்க்கம் நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீசுக்கு ஆழமான வேறு அர்த்தங்களும் காரணங்களும் இருக்கலாம் அதை ஆராய்ந்து பெண்களுக்கு காதிகலாகும் சந்தர்ப்பத்தை வழங்கினால் அநேகமான பெண்களின் பிரச்சிகள் தலாக் வரைக்கும் போகாது...

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி பர்வீன் மற்றும் சாமிலா

    ReplyDelete
  4. துயரமான அநுபவங்களினால் கசந்து சோர்ந்து நீதிபெற ஹாதி நீதிமன்றங்களுக்குச் செல்கின்ற பெண்கள் ஹாதி நீதிபதிகளினால் அவமதிக்கப்படுவதும், இதுமாதிரியான குற்றச்சாட்டுக்களும் புதிதல்ல. மேலே நண்பர்கள் கூறியிருப்பதுபோல இந்த இழிநிலைக்கு ஹாதிமார்களின் தகுதி, அநுபவம், சமூக அக்கறை என்பன நிர்ணயம் செய்யப்படாமை முக்கிய செல்வாக்குச் செலுத்தியபோதும், பெண்களின் மனநிலைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய, அவர்களின் பிரச்சினைகளை செவிமடுக்கத்தக்க பொறுமை பொதுவாகவே ஆண்களுக்குக் குறைவாக இருப்பதையும் நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். ஹாதி நீதிமன்றங்களில், ஹாதி நீதிபதியும், ஜூரிக்களும் ஆண்களாகவே இருக்கின்றனர். அவர்கள் பெண்களின் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ள முற்படுவதோ, அல்லது அவர்களின் பிரச்சினைகளை செவிமடுப்பதோ, குறைந்தபட்சம் பெண்களைப் பேச அனுமதிப்பதற்குக் கூட பின்வாங்குபவர்களாக உள்ளனர். மேலும் ஹாதி நீதிமன்ற அமைப்பும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. பகிரங்கமான முறையிலேயே விவாகரத்துக்கோரும், அல்லது சமரசத்துக்கு வரும் ஆண், பெண்களின் பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன. இதனால் பல பெண்கள் தங்களது பிரச்சினைகளை தெளிவாக முன்வைக்க தயங்குகின்றனர். இதுவும் ஆண்களுக்கு சாதகமாகவே அமைந்துவிடுகின்றது. இஸ்லாமியவாதிகளும், இஸ்லாமிய அறிஞர்களும் இவ்வாறான விடயங்களில் கவனஞ்செலுத்தி மாறுதலையும், இஸ்லாமிய நீதி குடும்ப அமைப்புகளை சீர்குழைக்கும் வகையில் அல்லாமல் சரியானதும், சரிஆ அனுமதித்துள்ள வழியிலும் செயற்படுவதற்குமான வழிகளை ஏற்படுத்தவேண்டும்.

    ReplyDelete